Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 25 நவம்பர் (ஹி.ச)
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியும், சிலரை போன் மூலம் அழைத்தும், நேரில் சென்றும் அக்.30-ம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், வேலுசாமிபுரத்தில் கடை வைத்துள்ளவர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், மின்வாரிய அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கரூர் சுற்றுலா மாளிகையில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், தவெக நிர்வாகி பவுன்ராஜ், தவெக வழக்கறிஞர் அரசு ஆகியோர் நேற்று(நவ 24) காலை 10 மணியளவில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் , தவெக நிர்வாகிகளிடம் 2வது நாளாக இன்றும் (நவ 25) சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் ஆஜராகி சிபிஐ கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b