Enter your Email Address to subscribe to our newsletters

திருத்தணி, 25 நவம்பர் (ஹி.ச.)
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பிரசித்தி பெற்ற திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஐந்தாம் படை வீடாக திகழ்கிறது. இங்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் , பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இக்கோயிலுக்கு கடந்த 1981ம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் சார்பில் வள்ளி என்று அழைக்கப்பட்ட பெண் யானை வழங்கப்பட்டது.கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி உடல்நலக்குறைவால் வள்ளி யானை உயிரிழந்தது.
யானைக்கு நந்தி ஆற்றங்கரையில் முருகன் கோயிலின் உப கோயிலான ஆறுமுகசாமி கோயில் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டமன்றத்தில் வள்ளி யானைக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி யானைக்கு மணிமண்டபம் கட்ட ரூ.49.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணிமண்டபம் கட்டுமான பணிகள் தொடங்கியது.
400 சதுர அடியில் யானை மணிமண்டபம் கட்டப்பட்டு யானை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மணிமண்டபம் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் மணிமண்டபம் திறப்பு விழா குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b