Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 நவம்பர் (ஹி.ச.)
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அதன் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், சென்னை வேப்பேரியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், இதுவரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவாக செயல்பட்டு கொண்டிருந்த அமைப்பு , இனி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக செயல்படும். கூட்டணி தொடர்பான முடிவுகள் எடுக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கே முழு அதிகாரம் வழங்கப்படுகிறது என 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
சில சுயநலவாதிகள் சர்வாதிகார போக்கோடு அதிமுகவை வழிநடத்த முற்பட்டதால் 11 தோல்விகளை சந்தித்து உள்ளது.
தான் தோன்றித்தனமாக நிர்வாகத்தை கையில் எடுத்து, இன்று நாம் கண்ணீர் விட்டு அழும் சூழ்நிலையை உருவாக்கியவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என நம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படிடையில், எதிர்கால திட்டங்களை வகுத்து மீண்டும் எம்ஜிஆர் எதற்காக அதிமுகவை உருவாக்கினாரோ அந்த நோக்கத்தில் செயல்பட வைப்போம். வரும் டிச.15-ம் தேதி மீண்டும் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும்.
அதற்குள் அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைத்து ஒற்றுமைப்படுத்த வேண்டும். அப்படி நடைபெறவில்லை என்றால் உரிமை மீட்பு கழகம், தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளும் முடிவை எடுக்கும். அந்த நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள். டிச.15-ம் தேதி எடுக்கப் போகும் முடிவு, அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமையும். திருந்தவில்லை என்றால் அன்றைய தினம் திருத்தப்படுவீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், எம்எல்ஏக்கள் ஆர்.வைத்திலிங்கம், ஐயப்பன், எம்.பி. தர்மர், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b