Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 நவம்பர் (ஹி.ச)
சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தல் மற்றும் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
மொத்தமுள்ள 82 மாவட்டங்களில் SIR பணிகள் சரிவர நடைபெறாத சில மாவட்ட செயலாளர்களுடன் மட்டும் எடப்பாடி பழனிசாமி பேசியதாக கூறப்படுகிறது. சுமார் 40 முதல் 45 மாவட்ட செயலாளர்களுடன் மட்டும் தான் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் சில மாவட்ட செயலாளர்கள், தென் மாவட்டங்களில் சில மாவட்ட செயலாளர்கள் சரிவர பணிகள் மேற்கொள்ளவில்லை என அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி கடிந்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்ட செயலாளர்களுடன் பேசிய எடப்பாடி பழனிசாமி,
’நம்முடைய மாவட்ட கழகச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், ஐடி விங் நிர்வாகிகள் வேகமாகவும், துரிதமாகவும் எஸ்.ஐ.ஆர். பணியை மேற்கொள்ள வேண்டும்.
தங்கள் மாவட்டத்தில் இருக்கின்ற, தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வாக்காளர் படிவம் கொடுக்கப்பட்டு விட்டதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
யாருக்காவது படிவம் கொடுக்கப்படாமல் இருந்தால் உடனடியாக நமது பிஎல்ஓ 2 மூலமாக பிஎல்.ஓவை தொடர்புகொண்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்காளர்களிடம் கொடுக்கப்பட்ட படிவத்தை முறையாக திருப்பி பெறவேண்டும். அதை பிஎல்ஓவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
வேகமாக துரிதமாக இந்த பணியை மேற்கொள்ள வேண்டும். திமுகவினர் தில்லுமுல்லு செய்வதை தடுத்து நிறுத்தி, அனைத்து வாக்காளர்களும் பட்டியலில் இடம்பெறுவதை உறுதிப்படுத்துங்கள்.
குறிப்பாக அதிமுக வாக்குகள் நீக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
இன்னும் 9 நாட்கள் உள்ளது.. வரும் நாட்களில் SIR பணிகளில் மிக கவனமாக செயல்பட வேண்டும்.
அதோடு 2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் பணியை உடனடியாக தொடங்குங்கள், தங்கள் தொகுதிக்குத் தகுதியான, சரியான வேட்பாளர் பெயர்களை பரிந்துரை செய்யுங்கள். நமது கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுங்கள்
மேலும், உள்ளூரில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுங்கள்.
நமது ஆட்சியில் மக்களுக்கு செய்த சாதனைப் பட்டியலை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டுபோய் சேர்க்கும் பணியில் ஈடுபடுங்கள்.
ஜனவரி மாதத்திற்குள் மெகா கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிடும். தலைமையின் தேர்தல் வியூகத்தை முழுமையாக செயல்படுத்துவதற்குத் தயாராக இருங்கள்.
2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் என்று பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ