Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 நவம்பர் (ஹி.ச.)
எத்தியோப்பியா எரிமலை வெடித்துச் சிதறிய நிலையில், சாம்பல் மேகங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு, கண்ணாடித் துகள்கள் கலந்திருப்பதால் இந்திய விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஹேலி குப்பி எரிமலை 10,000 ஆண்டுகளுக்குப் பின் வெடித்திருக்கும் நிலையில், அதன் சாம்பல் மேகங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை சூழ்ந்துள்ளது.
இந்த சாம்பல் மேகக் கூட்டங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு, சிறிய கண்ணாடித் துகள்கள், பாறைகளின் துகள்கள் கலந்துள்ளது.
மேலும், மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் 15,000 முதல் 45,000 அடி உயரத்தில் நகர்ந்து வருவதால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப் மற்றும் தில்லி வான் பரப்புகளில் சாம்பல் மேகக் கூட்டங்கள் சூழ்ந்துள்ள நிலையில், விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் விமானிகளுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விரிவான அறிவுரைகளை வழங்கியுள்ளது.
விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், விமான என்ஜின்களை பாதிக்கக்கூடிய துகள்கள் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான என்ஜினில் வழக்கத்துக்கு மாறாக ஏதேனும் அறியப்பட்டால் உடனடியாக விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்க விமானிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.
விமான நிலைய ஓடுபாதைகளில் சாம்பல் மேகங்களின் துகள்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அதனை சுத்தம் செய்து, பாதுகாப்பை உறுதி செய்யும்வரை விமானங்களை இயக்கக் கூடாது என்று விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பியாவுக்கான வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர், கேஎல்எம் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் ஏற்கெனவே அட்டவணைகளை மாற்றியமைத்துள்ளன.
சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சாம்பல் மேகங்கள் சூழ்ந்த பகுதிகளை தவிர்த்து, மாற்றுப் பாதையில் விமானங்களை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Hindusthan Samachar / JANAKI RAM