Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 25 நவம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (நவ 25) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, மணல் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை, கள்ளச்சாராய விற்பனை என பல சட்ட விரோதச் செயல்கள் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கின்றன. இதன் விளைவாக, வன்முறையாளர்களின் புகலிடமாக தமிழ்நாடு மாறிக் கொண்டு வருகிறது.
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பே, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மணலை அள்ளிச் செல்லலாம், எந்த அதிகாரியும் தடுக்கமாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் சொன்னதை தமிழக மக்கள். மறந்திருக்க மாட்டார்கள்.
2024 ஆம் ஆண்டு அமலாக்கத் துறை மேற்கொண்ட ஆய்வில் 28 குவாரிகளில் 987 எக்டேர் பரப்புக்கு சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு இருந்ததும், அதன் மதிப்பு 4,730 கோடி ரூபாய் என்றும் ஆனால் தமிழ்நாடு அரசுக்கு வெறும் 36 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாக கிடைத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
அதாவது, 4,700 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது அமலாக்கத் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை தலைமை இயக்குநருக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியது.
ஆனால், இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், கரூர் மாவட்டம், அமராவதி ஆற்றுப் பள்ளத்தாக்கில் மணல் குவாரிகள் அமைக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இரவு நேரங்களில் மணல் அள்ளப்படுவதாகவும், ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதைப் பயன்படுத்தி கரூர் மாவட்டத்தில் ராஜபுரம், சின்னதாராபுரம், அணைப்பாளையம், சுக்காலியூர், பெரிய ஆண்டாங்கோவில், கோயம்பள்ளி ஆகிய பகுதிகளில் மணல் திருட்டு அமோகமாக நடைபெற்று வருவதாகவும், இந்த மணல் திருட்டை காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் கண்டு கொள்வதில்லை என்றும், செய்திகள் வருகின்றன.
அரசு அதிகாரிகள் இதைக் கண்டுகொள்ளாததிலிருந்தே ஆளும் கட்சியினரின் தலையீடு இருக்கிறது என்பது தெளிவாகிறது. இது நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயல், மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதன்மூலம் நிலத்தடி நீர் குறைந்து, பொதுமக்கள் தண்ணீருக்கு அல்லல்பட வேண்டிய அவல நிலையும் உருவாகும். தமிழ்நாட்டில் நடைபெறும் மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் திமுக அரசுக்கு உண்டு.
எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b