Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 25 நவம்பர் (ஹி.ச.)
புதுச்சேரி அடுத்த திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட செல்லிப்பட்டு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் கடந்த மூன்று தினங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கிராம மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகினர்.
இது குறித்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அங்காளனுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த செல்லிப்பட்டு கிராம மக்கள், மூன்று நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்தும், புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்காத சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து புதுச்சேரி- திருக்கனூர் சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது சாலையில் மரங்களை போட்டு கிராம மக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு நடத்தினர்.
அப்போது அதிகாரிகளிடம் பேசி குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கிராம மக்களின் திடீர் மறியல் போராட்டத்தால் விழுப்புரம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் கூறுகையில் மூன்று நாட்களாக தண்ணீர் வராததால் மிகவும் சிரமத்திற்கு ஆளானோம். இதனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் உள்ளனர். இதனை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகையால் தான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். எம்எல்ஏ இவ்விஷயத்தை காதில் கூட வாங்குவதில்லை. தற்போது நடவடிக்கை எடுப்பதால் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம். இதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம். செல்லிப்பட்டு படுகை அணையும் உடைந்துபோய் கட்டவில்லை. சாலை மறியல் செய்த பிறகுதான் தண்ணீர் வருகிறது.
ஆழ்குழாய் கிணறு அமைப்பதாகக்கூறி வாக்குகளை பெற்றும் நாலரை ஆண்டுகளாகியும் தற்போதுதான் செய்யவுள்ளதாக குறிப்பிடுகின்றனர் என தெரிவித்தனர்.
தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அங்காளனின் சொந்த ஊர் செல்லிப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN