Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 25 நவம்பர் (ஹி.ச)
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மூன்றாவது நாளாக கனமழை நீடித்தது. ஆறு, கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை பெய்தது. நேற்று பகலில் மழை சற்று குறைந்திருந்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் இருந்து 7 மதகுகள் திறக்கப்பட்டதால் உப்பாற்று ஓடையில் கரைபுரண்டு செல்லும் தண்ணீர்.
கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகமானதால், 7 மதகுகள் வழியாக, 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அத்திமரப்பட்டி, காலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
தூத்துக்குடி மாநகரில் கோக்கூர், கதிர்வேல்நகர், நேதாஜி நகர், ராஜீவ்நகர், சிவஜோதி நகர், ஆதிபராசக்தி நகர், மச்சாது நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மாநகராட்சி சார்பில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம், நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு, மாவட்ட விளையாட்டு மைதானம், மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கி நிற்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பணியாளர்கள் உள்ளே செல்ல முடியவில்லை.
தூத்துக்குடி மாநகரில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை, கனிமொழி எம்.பி., அமைச்சர் பி.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சி.பிரியங்கா ஆகியோர் ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை விடப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று ரத்து செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 3 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
மாவட்டத்தில் நேற்று பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): காயல்பட்டினம் 94, கடம்பூர் 93, திருச்செந்தூர் 86.3, குலசேகரன்பட்டினம் 82, கழுகுமலை 78, வேடநத்தம் 77, ஓட்டப்பிடாரம் 72.5, தூத்துக்குடி 66, வைகுண்டம் 65.3, கீழ அரசடி 63, வைப்பார் 61, கயத்தாறு 60.5, சூரன்குடி 51, சாத்தான்குளம் 49.4, மணியாச்சி 47, எட்டயபுரம் 41.2, கோவில்பட்டி 39, விளாத்திகுளம் 29, காடல்குடி 7.
கயத்தாறு வட்டாரத்தில் தொடர் மழை காரணமாக, கடம்பூர் அருகே தொட்டம்பட்டி கிருஷ்ணசாமி, கயத்தாறு வேலம்மாள், இலந்தைபட்டி அழகர், தீத்தாம்பட்டி நாகலட்சுமி, கடம்பூர் மந்திரமூர்த்தி மற்றும் ஆறுமுகப்பாண்டி, சங்கராபேரித அச்சப்பன் ஆகிய 7 பேரின் வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீடுகளை ஆய்வு செய்து வட்டாட்சியருக்கு அறிக்கை சமர்ப் பித்துள்ளனர். நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN