Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 25 நவம்பர் (ஹி.ச.)
கர்நாடக மாநிலம் பெங்களூரு சிக்கபானவரா ரெயில் நிலையத்தின் அருகே தண்டவாளத்தில் இளம்பெண், வாலிபர் பிணமாக கிடந்தனர். அவர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது 2 பேரும் பெலகாவியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த வந்தே பாரத் ரெயிலில் அடிபட்டு பலியானது தெரிய வந்தது.
இதையடுத்து 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் பலியானவர்கள் கேரளாவில் உள்ள பத்தனம்திட்டாவை சேர்ந்த ஜஸ்டின் ஜோசப் (வயது 20), ஸ்டெர்லின் எலிசா சாஜி (19) என்பதும் இவர்கள் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்ததும் தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் சிக்கபனாவாரா பகுதியில் உள்ள விடுதியில் தங்கி, கல்லூரி ஒன்றில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் மதியம் வெளியில் சென்றுள்ளனர். அதன்பின்னர் தான் அவர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் 2 பேரும் வெளியே சென்றுவிட்டு விடுதிக்கு திரும்பும் வழியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி பலியானார்களா அல்லது அவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா என்பது தெரியவில்லை.
இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் வந்தே பாரத் ரெயிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் கூடுதல் தகவல் தெரியவரும் என்று ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM