2-வது டெஸ்ட் - இந்தியாவுக்கு 549 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா அணி
கவுகாத்தி, 26 நவம்பர் (ஹி.ச.) இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்க
2-வது டெஸ்ட் - இந்தியாவுக்கு 549 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா அணி


கவுகாத்தி, 26 நவம்பர் (ஹி.ச.)

இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. செனுரன் முத்துசாமி சதம் (109 ரன்) அடித்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83.5 ஓவர்களில் 201 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

அடுத்து இந்தியாவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தது. ரையான் ரிக்கல்டன் (13 ரன்), எய்டன் மார்கரம் (12 ரன்) களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா அணி மொத்தம் 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 78.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 94 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 549 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் இறங்கினர்.

இந்த முறையும் ஏமாற்றம் அளித்த இந்த ஜோடி வெறும் 17 ரன்களில் பிரிந்தது. முதல் இன்னிங்சில் அதிக ரன் அடித்தவரான ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து சாய் சுதர்சன் களமிறங்கினார். சிறிது நேரத்திலேயே மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன கே.எல். ராகுல் 6 ரன்களில் நடையை கட்டினார். இதனையடுத்து விக்கெட் காப்பாளராக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4-வது வரிசையில் களமிறங்கி உள்ளார்.

4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 15.5 ஓவர்களில் 27 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. சுதர்சன் 2 ரன்களுடனும், குல்தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி வெற்றி பெற இன்னும் 522 ரன்கள் அடிக்க வேண்டும். மறுபுறம் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும்.

இத்தகைய சூழலில் இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM