Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 நவம்பர் (ஹி.ச.)
பிரம்மோஸ் என்பது இந்தியா மற்றும் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட ஒரு சூப்பர்சோனிக் ஏவுகணையாகும்.
நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி போன்ற பல்வேறு தளங்களில் இருந்து இந்த ஏவுகணையை இலக்கு நோக்கி ஏவ முடியும்.
300 கிலோ வெடிபொருட்களை சுமந்து சென்று துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. இந்த அதிவேக ஏவுகணை 450 கி.மீ. தொலைவுக்கு சென்று எதிரி இலக்கை தாக்கும் திறன் பெற்றது.
நம் முப்படைகளிலும் பிரம்மோஸ் செயல்பாட்டில் உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு இந்தியா- பிலிப்பைன்ஸ் இடையே ரூ. 412 கோடியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து முதற்கட்டமாக பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணையை இந்தியா பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது.
தற்போது, 450 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில், 4,011.93 கோடி ரூபாய்) மதிப்பில் இந்தோனேஷியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் உள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ், துபாய் விமான கண்காட்சியில் பல்வேறு தரப்பினர் கவனத்தை ஈர்த்தது.
இதனால் வாங்குவதில் பல நாடுகள் ஆர்வம் காட்டுவதால், மேலும் ஒப்பந்தங்கள் தொடரக்கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிரமோஸ் என்ற பெயரைக் கேட்டாலே சிலர் மனதில் பயத்தை ஏற்படுத்துகிறது என்று தீபாவளி பண்டிகையையொட்டி ஐஎன்எஸ் விக்ராந்தில் கடற்படை வீரர்கள் மத்தியில் பேசும் போது பிரதமர் மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM