தண்டையார்பேட்டை, அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது தொடர்பான டெண்டர் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது - சென்னை மாநகராட்சி
சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.) சென்னை மாநகராட்சியில், தண்டையார்பேட்டை, அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது தொடர்பான டெண்டர் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென
Secretariat


சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.)

சென்னை மாநகராட்சியில், தண்டையார்பேட்டை, அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது தொடர்பான டெண்டர் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் ஆர் சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தூய்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், தனியாருக்கு வழங்குவது என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. மாநகராட்சிக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் இடையில் தொழிலாளி முதலாளி என எந்த உறவும் இல்லை எனும் போது அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கேள்விக்கு இடமில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் ஏற்கனவே தூய்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டு விட்டது. தற்போது வரை 16,063 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஒப்பந்த நிறுவனங்கள் தொழிலாளர்களின் நலன்களை சட்டபூர்வ பலன்களை பாதுகாத்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் 875 பேருக்கு நியமன உத்தரவுகள் வழங்கியபோதும் 425 பேர் மட்டுமே பணியில் சேர்ந்து இருக்கிறார்கள் என்றும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை மற்றும் அண்ணா நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகள் விரைவில் தனியாருக்கு வழங்கப்படும் என்றும் அதற்கான டெண்டர் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் அவகாசம் கோரியதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ