Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 26 நவம்பர் (ஹி.ச.)
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள உப்பரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இங்குள்ள வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் கோவிந்தசாமி செம்மரம், சந்தனம், தேக்கு, தென்னை உள்ளிட்ட மரங்களை வளர்த்து பராமரித்து வந்தார்.
தற்போது கோவிந்தசாமி குடும்பத்துடன் ஓசூர் பகுதியில் வசித்து வருவதால், அந்த நிலத்தை பராமரிக்கும் பொறுப்பில் கொட்டாரமடுகு பகுதியை சேர்ந்த கோபி என்ற காவலாளி பணியாற்றி வந்தார்.
கோபி அடிக்கடி வனப்பகுதிக்கு சென்று வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாகவும், நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாகவும் தமிழ்நாடு வன மற்றும் வன உயிரின குற்றக்கட்டுப்பாட்டு பிரிவுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.
இதன் பேரில் வேலூர் மற்றும் குடியாத்தம் வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து அந்த விவசாய நிலத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அங்கு நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு நாட்டு துப்பாக்கிகள் குண்டுகளுடன் ‘லோடு’ செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன.
மேலும் துப்பாக்கி மருந்து, மயில் இறகு, முயல் வலை, டார்ச் லைட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து காவலாளி கோபி கைது செய்யப்பட்டு குடியாத்தம் கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு நாட்டு துப்பாக்கிகளில் இருந்த உயிர் குண்டுகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் எடுத்துச் சென்று பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர். அதன் பின்னர் துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
வனப் பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN