Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 நவம்பர் (ஹி.ச.)
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் ரெப்போ ரேட் என்று அழைக்கப்படுகிறது.
2 மாதங்களுக்கு ஒருமுறை, ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூடி, ரெப்போ வட்டி விகிதத்தை முடிவு செய்கிறது. இக்குழுவின் அடுத்த கூட்டம் டிசம்பர் மாதம் நடக்கிறது.
இதற்கிடையே, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ஒரு டெலிவிஷன் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த மாதம் நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டத்தில், ரெப்போ வட்டி குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போதிருந்து நமக்கு கிடைத்த மேக்ரோ பொருளாதார தரவுகள், ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிவிக்கின்றன. எனவே, நிச்சயமாக வட்டி குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆனால், வரும் டிசம்பர் மாதத்திலேயே குறைக்கப்படுமா, அல்லது பின்னர் நடக்கும் நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் குறைக்கப்படுமா என்பது பற்றி நிதிக்கொள்கை குழு தான் முடிவு செய்யும்.
எங்கள் முதல் கடமை, விலைவாசியை நிலைப்படுத்துவதுதான். அதே சமயத்தில், வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், ரிசர்வ் வங்கி நேற்று பொருளாதார நிலவர அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அக்டோபர் மாதத்தில், இந்திய பொருளாதாரம் வேகம் எடுத்துள்ளது. உற்பத்தி, சேவை துறைகள் விரிவடைந்துள்ளன. ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. பணவீக்கம், வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இலக்குக்கு உள்ளேயே இருக்கிறது.
இந்த ஆண்டில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தனியார் முதலீட்டை அதிகரிக்கவும், உற்பத்தி, வளர்ச்சியை அதிகரிக்கவும், நீண்ட கால பொருளாதார மீட்சிக்கும் பாதை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM