Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 நவம்பர் (ஹி.ச.)
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிச., 1ல் துவங்குகிறது.
இதற்கான ஏற்பாடுகளில், பார்லிமென்ட் அதிகாரிகள் துவங்கி கடைநிலை அலுவலர்கள் வரை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மழைக்கால கூட்டத்தொடரில், ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமாவுக்கு பின், துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிக்கு வந்துள்ள நிலையில் நடக்கவுள்ள முதல் கூட்டத்தொடர் இது.
எனவே, ராஜ்யசபா தலைவர் என்ற முறையில் சபையை அவர் எவ்வாறு வழிநடத்திச் செல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடருக்கான விதிமுறை கையேட்டை ராஜ்யசபா செயலகம் வெளியிட்டு உள்ளது.
அதில், எம்.பி.,க்களுக்கான பல்வேறு நடத்தை விதிமுறைகள் விபரமாக விளக்கப்பட்டுள்ளன.
அதன் விபரம்:
சபைக்குள், எந்த பொருட்களையும் எடுத்து வந்து, காட்சிப்பொருளாக வைக்கவோ காட்டவோ கூடாது.
சபை விவாதத்தின் போது ஒரு எம்.பி., மற்றொரு எம்.பி.,யையோ அல்லது அமைச்சரையோ விமர்சித்தால், அதற்கு சம்பந்தப்பட்ட எம்.பி.,யோ அல்லது அமைச்சரோ பதில் அளிக்கும் போது, விமர்சனம் செய்த எம்.பி., சபையில் இருக்க வேண்டும். அதையும் மீறி, பதிலுரையின்போது அந்த எம்.பி., சபைக்குள் இல்லை என்றால், அது, பார்லிமென்ட் விதிகளை மீறும் செயலாக எடுத்துக் கொள்ளப்படும்.
அதே போல, முன்னுதாரணங்களின் அடிப்படையில்தான் சபை தலைவரால் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. எந்த முன்னுதாரணமும் இல்லாத பட்சத்தில், வழக்கமான பார்லிமென்ட் நடைமுறைகளை பின்பற்றியே சபை தலைவரின் தீர்ப்பு இருக்கும்.
அவ்வாறு, சபை தலைவர் ஒரு முடிவை எடுத்து அறிவித்தாலோ அல்லது ஒரு பிரச்னைக்காக தீர்ப்பளித்தாலோ, அவற்றை எக்காரணம் கொண்டும் யாரும் சபைக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி விமர்சிக்க கூடாது. சபையின் கண்ணியம் காக்கும் வகையில் எம்.பி.,க்கள் நடந்து கொள்ள வேண்டும்.
சபைக்குள், 'நன்றி, தங்களுக்கு நன்றி, ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்' போன்ற கோஷங்களை எழுப்பக் கூடாது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM