Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.)
நடப்பாண்டு ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பித்த பள்ளி மாணவர்களின் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் (சென்னை தவிர்த்து) அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வெழுத தகுதி பெற்றவர்களாவர். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும்.
அதன்படி நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு நவம்பர் 29ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்களின் பெயர்ப் பட்டியலுடன் கூடிய வருகைத்தாட்கள் மற்றும் ஹால்டிக்கெட்கள் www.dge.tn.gov.in எனும் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
அதை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஹால்டிக்கெட்டில் தலைமை ஆசிரியர்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும். மேலும், மாணவர்களுக்கு தேர்வு மைய விவரத்தையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
ஹால்டிக்கெட்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சிவப்பு நிற மையினால் திருத்தி பள்ளி தலைமையாசிரியர் சான்றொப்பமிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b