Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.)
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகிற 3-ந் தேதி இரவு 9.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புகோட்டை, மானாமதுரை,காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு 4-ந் தேதி காலை 8.30 மணிக்கு வந்தடைகிறது.
பின்னர் அந்த ரெயில் 4-ந் தேதி இரவு 7.55 மணிக்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை,காரைக்குடி, மானாமதுரை, அருப்புகோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக 5-ந் தேதி காலை 8.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகிற 3-ந் தேதி காலை 9.15 மணிக்கு பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி வழியாக திருவண்ணாமலைக்கு மதியம் 1.20 மணிக்கு வருகிறது.
பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக இரவு 7 மணிக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தை அடைகிறது. இதேபோல் இந்த ரெயில் 4-ந் தேதியும் இயக்கப்படுகிறது.
விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகிற 30, 3, 4 மற்றும் 5 ஆகிய 4 நாட்கள் மெமு விரைவு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. விழுப்புரத்தில் இருந்த மேற்கண்ட நாட்களில் காலை 10.10 மணியளவில் புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பலப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு பகல் 11.45 மணிக்கு வந்தடைகின்றது.
பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு தண்டரை, அண்டம்பள்ளம், ஆதிச்சநல்லூர், திருக்கோவிலூர், அயந்தூர், மாம்பலப்பட்டு, வெங்கடேசபுரம் வழியாக மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடைகின்றது.
இதேபோல் மற்றொரு மெமு சிறப்பு ரெயில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 3-ந் தேதி இரவு 10.40 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.15 மணிக்கு திருவண்ணாமலைக்கு வருகிறது. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து 4-ந் தேதி அதிகாலை 1.45 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தை அடைகிறது.
அதனை தொடர்ந்து வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் இருந்து 4-ந் தேதி காலை 2.05 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு அதிகாலை 3.20 மணிக்கு வருகிறது. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரத்திற்கு அதிகாலை 5 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல் இந்த சிறப்பு ரெயில் 3-ந் தேதி
முதல் 6-ந் தேதி வரை தொடர்ந்து இயக்கப்பட உள்ளது.
தாம்பரத்தில் இருந்து வருகிற டிசம்பர் 3,4 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06049), அதேநாள் மதியம் 1.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்க்கமாக, திருவண்ணாமலையில் இருந்து வருகிற டிசம்பர் 3,4 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06050), அதேநாள் இரவு 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b