Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 26 நவம்பர் (ஹி.ச.)
எஸ்.டி.பி.ஐ கட்சியின் பூத் கமிட்டி மாநாடு,கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது.
மாநாட்டை தொடர்ந்து,எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர்,
குறைந்த மக்கள் தொகை கொண்ட ஆக்ரா, லக்னோ போன்ற நகரங்களுக்கு மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசு,மிகப்பெரிய தொழில் வளங்களை கொண்டுள்ள கோவை, மதுரை போன்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை புறக்கணிப்பது, ஒன்றிய அரசு தமிழகத்தின் மீது காட்டும் ஓர வஞ்சனையாக பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
எனவே தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையையும், மாநில அரசின் முயற்சியையும் மதித்து, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.
மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு நான்கு தொழிலாளர் விரோதக் கறுப்புச் சட்டத் தொகுப்புகளை நாடு தழுவிய அளவில் அமல்படுத்தியிருப்பது, இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள மிகக் கொடூரமான தாக்குதல் எனவும், சீர்திருத்தம் என்ற போர்வையில் தொழிலாளர்களை நவீன அடிமைகளாக மாற்றி, உலக அளவில் தொழிலாளர்கள் மோராடி பெற்ற ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை என இருப்பதை,ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலையாக சட்டப்பூர்வமாக்கி தொழிலாளர்களின் நலனை கார்ப்பரேட்டுகளிடம் அடகு வைப்பதாக அவர் விமர்சித்தார்.
எனவே இந்த நான்கு தொழிலாளர் விரோதக் கறுப்புச் சட்டத் தொகுப்புகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென ஒன்றிய பாஜக அரசை எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துவதோடு, இந்த விவகாரத்தில் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளைக் காக்க எஸ்டிபிஐ உறுதியுடன் போராடும் என உறுதியளித்தார்.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision SIR) பெரும் குளறுபடிகளுடனும், மக்களுக்கு அளவுகடந்த இன்னல்களை ஏற்படுத்தியவாறும் நடைபெற்று வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, பல மாவட்டங்களில் மழை வெள்ளப் பேரிடர் நிலவுகிறது. கனமழை, வெள்ளம் காரணமாக மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர இயலாத நிலை உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறிருக்க, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி டிசம்பர் 4-ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும்; எவ்வகையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று உறுதியாக அறிவித்திருப்பது மக்களையும் அலுவலர்களையும் மேலும் நெருக்கடிக்கு ஆளாக்குவதாக உள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவதற்கான கருவியாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை ஒதுக்கி விடுவதற்கோ அல்லது வாக்குரிமையைப் பறிப்பதற்கோ பயன்படுத்தப்படும் ஆயுதமாக மாறிவிடக் கூடாது.
எனவே, அவசரகதியில் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இந்தச் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை (SIR) உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / V.srini Vasan