Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 26 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்துள்ள காப்புலிங்கம்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் கோமு (58). இவரது மனைவி தங்கத்தாய். கோமு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.
இதனால் கோமுவுக்கும் அவரது மனைவி தங்கத்தாய்க்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக தங்கத்தாய் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாக தெரிகிறது. தங்கத்தாயை அவரது சகோதர முறை உறவினர்களான காப்புலிங்கம்பட்டி கீழத்தெருவை சேர்ந்த அந்தோணி மகன் மந்திரம் மற்றும் அதே தெருவை சேர்ந்த சண்முகையா மகன் முருகன் ஆகியோர் எங்கோ தங்க வைத்துள்ளதாக கோமு சந்தேகமடைந்தார். இதனால் மூன்று பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கயத்தாறு அருகே உள்ள தளவாய்புரத்தில் அமைந்துள்ள மதுபான கடை பாரில் மந்திரமும், முருகனும் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற கோமு இருவரிடமும் எனது மனைவியை எதற்காக மறைத்து வைத்துள்ளீர்கள் என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றியதை அடுத்து கோமு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு கோமு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
உடனே அருகில் இருந்தவர்கள் மந்திரம் மற்றும் முருகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். மந்திரம் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸ் தலைமறைவாக உள்ள கோமுவை தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN