Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 நவம்பர் (ஹி.)
சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில், உள்துறை அமைச்சகமும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறையும் இணைந்து நடத்தும் ‘மை பாரதத் கேந்த்ரா’ திட்டத்தின் கீழ், பழங்குடி இளைஞர் பரிமாற்றம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேஷ் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் கலந்து கொண்டனர். பாரம்பரிய உடை அணிந்து அவர்கள் நாட்டுப்புற ஆடல், பாடல் மற்றும் கலாச்சார கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இளைஞர்கள் கல்லூரியின் நூலகம், ஆய்வகங்கள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளை ஆசிரியர்களுடன் பார்வையிட்டனர். மேலும், அவர்களை வரவேற்க கல்லூரி மாணவர்களும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்கள் முனைவர் ராஜா, முனைவர் பழனிகுமார், மேலாண்மை இயக்குநர் மாறன் மற்றும் மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா,
பழங்குடியினர் வளர்ச்சி இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சி முழுமையடையாது என பிரதமர் கூறியுள்ளார்.
இந்த பரிமாற்ற நிகழ்ச்சி தமிழகத்தில் 25 இடங்களில் நடத்தப்படுகிறது. சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியின் துவக்க விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது, என்றார்.
மேலும், இந்த இளைஞர்கள் சென்னை நகரின் பிர்லா கோளரங்கம், மெரினா பீச் ஆகிய இடங்களைப் பார்வையிட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதாகவும், இடதுசாரி தீவரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து வந்த இவர்களுக்கு வளர்ச்சியடைந்த சென்னை ஒரு புதிய பார்வையை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீ சாய்ராம் கல்லூரியின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, மாநிலங்களுக்கு இடையேயான கலாச்சார பரிமாற்றத்தையும், பழங்குடியினரின் முன்னேற்றத்தையும் வலுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / Durai.J