ஐடி துறை ஊழியர்களுக்கு வரவிருக்கும் சலுகைகள்!
சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து, நான்கு புதிய சட்டத் தொகுப்புகளை (New Labour Codes) கடந
ஐடி துறை ஊழியர்களுக்கு வரவிருக்கும் சலுகைகள்!


சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து, நான்கு புதிய சட்டத் தொகுப்புகளை (New Labour Codes) கடந்த நவம்பர் 21-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.

இந்தச் சட்டங்கள் அனைத்துத் துறை ஊழியர்களுக்கும், குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் (IT) துறை ஊழியர்களுக்கும், பல்வேறு முக்கியமான பலன்களை உறுதி செய்கின்றன.

புதியதாக அமல்படுத்தப்பட்டுள்ள நான்கு சட்டத் தொகுப்புகள்:

தொழிலாளர் ஊதியச் சட்டம், 2019 (Code on Wages, 2019)

தொழில்துறை உறவுகள் சட்டம், 2020 (Industrial Relations Code, 2020)

சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020 (Code on Social Security, 2020)

தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம், 2020 (Occupational Safety, Health and Working Conditions Code, 2020)

சலுகைகள் மற்றும் பலன்கள் என்னென்ன?

* அனைத்து ஐடி நிறுவனங்களும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்குவதை இந்தச் சட்டம் கட்டாயமாக்கி உள்ளது.

* நிரந்தர ஊழியர்களைப் போலவே ஒப்பந்த ஊழியர்களுக்கும் அனைத்து சலுகைகளையும் வழங்குவதை இந்தச் சட்டங்கள் உறுதி செய்கின்றன.

* அதே போல் பணி நேரம் நிரந்தர ஊழியர்களைப் போலவே ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.

* ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை இந்தச் சட்டங்கள் உறுதி செய்கின்றன.

கூடுதல் நேரப் பணிக்கு (Overtime) ஊழியர்களுக்கு இரட்டைச் சம்பளம் (Double Salary) வழங்கப்பட வேண்டும் என்பதை இந்தச் சட்ட தொகுப்புகள் உறுதியளிக்கின்றன.

அதே போல் ஆண்களைப் போலவே பெண்களையும் இரவு நேரப் பணியில் (Night Shift) ஈடுபடுத்தலாம். இருப்பினும், இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.

1. பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

2. ஊழியர்களின் விருப்பம் கேட்டறியப்பட வேண்டும். இதன் மூலம் ஐடி துறையில் பெண்களின் மதிப்பு மற்றும் வாய்ப்புகள் உயரக்கூடும்.

இந்தச் சட்டங்கள் மூலம் ஒரு நிறுவனத்தில் ஓராண்டு காலம் பணியாற்றினாலே கிராசூவிட்டி தொகை பெறுவது உட்பட பல்வேறு அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தச் சட்டங்களின் அமலாக்கம், குறிப்பாக ஐடி மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிதி மற்றும் பணி நிலைமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடி அல்லாத மற்ற துறைகளுக்கு இதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

அனைத்துத் துறைகளிலும் உள்ள ஊழியர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதிக்குள் சம்பளம் அல்லது கூலி வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.

ஆண்/பெண் அல்லது பணி வகைப்பாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ஒரே வேலை அல்லது ஒரே தன்மை கொண்ட வேலைக்கு சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்குகிறது.

நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை அரசு நிர்ணயிக்க வழிவகை செய்கிறது.

இதன் மூலம், எந்தவொரு மாநிலத்திலும் இந்தத் தேசிய அளவை விடக் குறைவாக ஊதியம் வழங்க முடியாது.

ஊதிய வரம்பைப் பொருட்படுத்தாமல், அனைத்து ஊழியர்களுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் பங்களிப்பு பெறுவதை உறுதி செய்கிறது.

Hindusthan Samachar / JANAKI RAM