Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 26 நவம்பர் (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் அரசு பென்ட்லெண்ட் மருத்துவமனைக்கு அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில் கடந்த 24ஆம் தேதி பெண் சிசு சடலம் ஒன்று மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குழந்தை மருத்துவமனையில் பிறந்ததா? அல்லது வீட்டில் பிறந்த குழந்தையை யாரேனும் அங்கு வீசி சென்றார்களா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் குழந்தையின் தந்தையும் பாட்டியும் சேர்ந்து சடலத்தை கழிவுநீர் கால்வாயில் வீசி சென்றது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தாழனூரைச் சேர்ந்தவர் வினோத் குமார் (25). இவர் சென்னையில் கட்டடத் தொழிலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது பகுதியை சேர்ந்த முனியம்மாள் (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதனையடுத்து முனியம்மாள் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
கடந்த 22ஆம் தேதி சனிக்கிழமை, முனியம்மாளுக்கு திடீர் பிரசவ வலி ஏற்படவே, அவரை வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் குறை பிரசவத்தின் காரணமாக குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் குழந்தையின் சடலத்தை வினோத் மற்றும் அவரது தாயார் சுமதி (வயது 55) ஆகியோரிடம் வழக்கமான முறைப்படி ஒப்படைத்தது.
ஆனால், அந்த நேரத்தில் மதுபோதையில் இருந்த வினோத், மருத்துவமனை ஊழியர்களுடன் குழந்தை இறந்தது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. கோபத்திலும், மன அழுத்ததிலும் இருந்த அவர், தனது தாயார் சுமதியுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், குழந்தை இறந்த ஏமாற்றத்தில் இருந்த இருவரும், சடலத்தை மருத்துவமனைக்கு அருகிலுள்ள கால்வாயில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் காலை, மருத்துவமனைக்கு அருகிலுள்ள கால்வாயில் பெண் சிசு சடலம் மிதந்த நிலையில் கிடந்ததை பார்த்த பொதுமக்கள், வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் அங்குவந்த போலீசார் சடலத்தை மீட்டனர். மருத்துவமனையில் இறந்த குழந்தைகளின் விவரங்கள், சிசிடிவி காட்சிகள், சாட்சியங்கள் போன்றவற்றை சோதனை செய்தபோது சடலம் அங்கு எவ்வாறு எறியப்பட்டதென்பது தெளிவானது.
இந்நிலையில் வினோத் மற்றும் சுமதியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனையடுத்து சட்டப்படி, குழந்தையின் சடலத்தை வேலூர் போலீசார் அடக்கம் செய்து இறுதி மரியாதை செலுத்தினர்.
இறந்த சிசுவை தந்தையும், பாட்டியுமே கழிவுநீர் கால்வாயில் வீசிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN