புதுச்சேரியில் டிச 5 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் ரோட்ஷோ நடத்த அனுமதி கோரி மனு
புதுச்சேரி, 26 நவம்பர் (ஹி.ச.) கரூரில் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான பிறகு, கடந்த நவ 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக மக்களை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில்
புதுச்சேரியில் டிச 5 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் ரோட்ஷோ நடத்த அனுமதி கோரி மனு


புதுச்சேரி, 26 நவம்பர் (ஹி.ச.)

கரூரில் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான பிறகு, கடந்த நவ 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக மக்களை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரத்தில் ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் உள்ளரங்கு கூட்டமாக நடைபெற்ற இந்த பிரசாரக் கூட்டத்தில், 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரியில் வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதி விஜய் ரோட்ஷோ மேற்கொள்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் அனுமதி கோரி காவல்துறை இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தவெக தலைவர் விஜய், சாலை மார்க்கமாக காலாப்பட்டில் தொடங்கி அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வழியாக வருகை புரிந்து மக்களை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின் போது கீழ் கண்ட இடத்தில் ஒலிப் பெருக்கியின் மூலமாக உரையாட உள்ளார். ஆகையால் இந்த நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உப்பளம், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகில் விஜய் உரையாற்றவுள்ளார் என்றும், காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b