பிரதமரை சந்தித்து மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும்படி முதலமைச்சர் முக.ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
சென்னை, 3 நவம்பர் (ஹி.ச.) தமிழக மீனவர்கள் 35 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்து விடாது என்பதை உணர்ந்து முதலமைச்சர் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
Anbumani


Tweet


சென்னை, 3 நவம்பர் (ஹி.ச.)

தமிழக மீனவர்கள் 35 பேர் சிங்களக் கடற்படையினரால்

கைது செய்யப்பட்டுள்ளனர். கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்து விடாது என்பதை

உணர்ந்து முதலமைச்சர் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

நாகை மாவட்டத்திலிருந்து வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 3 விசைப் படகுகளும், ஒரு நாட்டுப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.

இராமேஸ்வரம் பகுதியிலிருந்து இரு நாள்களுக்கு முன் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் நடுக்கடலில் தாக்கி விரட்டியடித்தனர். இதையடுத்து அவர்கள் மீன் பிடிக்க முடியாமல் பாதியில் திரும்பினார்கள். அதனால் ஏற்பட்ட பதட்டம் விலகுவதற்கு முன்பாகவே தமிழ்நாடு மற்றும் புதுவையைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர் சமூகங்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 74 மீனவர்கள் இன்றைய நிலவரப்படி இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த பல ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட 242 மீன்பிடிப் படகுகளும் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன. கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 நாள்களில் விடுதலை செய்யப்பட்டு வந்த நிலை மாறி, இப்போது தமிழக மீனவர்களுக்கு ஆண்டுக்கணக்கில் சிறையும், கோடிக்கணக்கில் அபராதமும் விதிக்கப்படுகிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிங்கள அரசு திட்டமிட்டே இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் வாடிக்கையாகி விட்ட நிலையில், அதற்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது கடமையை முடித்துக் கொள்கிறார்.

இது மட்டுமே தமது பணியல்ல என்பதை அவர் உணர வேண்டும். அமைச்சர்கள் மற்றும் மீனவர் சமுதாய பிரதிநிதிகளை அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்த வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ