Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 3 நவம்பர் (ஹி.ச.)
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரம் பகுதி சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
கரூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வரும் வேளையில் சி.பி.ஐ. அதிகாரிகளின் ஒரு குழு சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் விஜய் பிரசார வாகனத்தை விரைவில் ஆய்வு செய்து, அதில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் பெயர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சேர்த்துள்ளனர்.
விஜய்யின் பிரசார வாகன ஆய்வின்போது, த.வெ.க. அலுவலகத்தில் வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமாரிடம் விசாரணை நடத்துவதற்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM