தாயுமானவர் திட்டம் - முதியவர்களுக்கு இன்று முதல் வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருள் விநியோகம்
சென்னை, 3 நவம்பர் (ஹி.ச.) தமிழக ரேஷன் கடைகளில், 2.25 கோடி கார்டு தாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்படுகின்றன. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும், ‘முதல்வரின் தாயுமான
தாயுமானவர் திட்டம் - முதியவர்களுக்கு இன்று முதல் வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருள் விநியோகம்


சென்னை, 3 நவம்பர் (ஹி.ச.)

தமிழக ரேஷன் கடைகளில், 2.25 கோடி கார்டு தாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்படுகின்றன.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும், ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டத்தை, கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகளின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.மேலும் சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கு ரேஷன் கிடைப்பதை இந்த திட்டம் உறுதி செய்கிறது.

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற தகுதியுடையவர்கள். அவர்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, எண்ணெய் மற்றும் பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கப்படும்.

அதன்படி தற்போது தாயுமானவர் திட்டத்தில் இன்று (நவ 03) முதல் 6ம் தேதி வரை வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளது.

தாயுமானவர் திட்டத்துக்கான வயது வரம்பு 70-லிருந்து 65ஆக தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 20.42 லட்சம் மூத்த குடிமக்களும் 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் பயன் பெறுகின்றனர்.

சென்னையை பொறுத்தவரையில் அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையார், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 990 நியாயவிலைக்கடைகளின் விற்பனையாளர்கள், அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b