வீட்டு பத்திரத்தை மீட்கக் கோரி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பேத்தியுடன் பாட்டி தீக்குளிக்க முயற்சி
தூத்துக்குடி, 3 நவம்பர் (ஹி.ச.) தூத்துக்குடி புதிய முனிசாமிபுரத்தைச் சேர்ந்த ரா. மெல்ஸி அகஷ்றினாள் என்ற பெண் தனது 3 வயது பேத்தியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் திடீரென தான் கொண்டு வந்த பையில் இருந்த பாட்டிலில் இருந
வீட்டு பத்திரத்தை மீட்கக் கோரி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பேத்தியுடன் பாட்டி தீக்குளிக்க முயற்சி


தூத்துக்குடி, 3 நவம்பர் (ஹி.ச.)

தூத்துக்குடி புதிய முனிசாமிபுரத்தைச் சேர்ந்த ரா. மெல்ஸி அகஷ்றினாள் என்ற பெண் தனது 3 வயது பேத்தியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது அவர் திடீரென தான் கொண்டு வந்த பையில் இருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை தன்மீதும், தனது பேத்தி மீதும் ஊற்ற முயன்றார். இதையடுத்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரை ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

நான் மேலேகண்ட முகவரியில் 30 வருடங்களாக என் கணவர் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தேன். என்னுடைய மகன் 12 ஆண்டுகளுக்கு முன் இறந்து போய்விட்டான். என்னுடைய கணவர் 2021 ஆம் ஆண்டு (3 வருடங்களுக்கு முன்) இறந்துவிட்டார்.

வீடு கட்டுவதற்காக சவுத் இந்தியன் வங்கியில் ரூ.15 லட்சம் கடன் வாங்கி இருந்தோம். அந்த கடனை ரூ.3,00,000 திருப்பி செலுத்திவிட்டோம். மீதி கடன் இருந்த நிலையில் என்னுடைய கணவர் இறந்துவிட்டார். அதற்கு பிறகு நான் மாவு விற்று அந்த கடனை செலுத்தி வந்தேன். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் வந்த வெள்ளத்தில் என்னால் கடன் அடைக்க முடியாமல் போய்விட்டது.

பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சரவணப்பாண்டி என்பவர் என்னை அழைத்துச் சென்று தயாளன் என்பவரிடம் வங்கிக்கு சென்று ரூ.12லட்சம் வங்கியில் கட்டிவிட்டு நீங்கள் பணத்தை திரும்பித் தரும் பட்சத்தில் பத்திரத்தினை திருப்பித் தருகிறேன் என்றனர். அந்த பத்திரத்தினை தயாளன் வேறு ஒருவர் பெயரில் மாற்றிவிட்டு பேங்க் ஆப்பரோடாவில் அந்த நபர் ரூ.65லட்சம் கடன் பெற்றுள்ளார்.

சுமார் 1 கோடி மதிப்புள்ள என்னுடைய சொத்தை தயாளன் என்பவர் எனக்கு வெறும் ரூ.5,00,000 தந்துவிட்டு ஒத்திக்கு வீடு பார்த்து இருக்குமாறு கூறி என்னை ஏமாற்றிவிட்டார். இப்போது நான் என்னுடைய பத்திரத்தை மீட்டு எடுக்க வேண்டும். ஆனால் என்னுடைய பத்திரத்தை போலியாக அவருடைய பெயரில் பத்திர பதிவு செய்துள்ளார்.

இதை அறிந்த நான் அவரிடம் சென்று கேட்டபோது அதை என்னால் தர முடியாது என்று கூறிவிட்டார். நான் இதற்கு முன்பு இரண்டு ஆட்சியரிடம் மனுதாக்கல் மாவட்ட முறை செய்துவிட்டேன். மூன்றாவது முறை டி.எஸ்.பி. அவர்கள் 30 நாட்களில் வாங்கி தருகிறேன் என கூறினார்கள். ஆனால் அவர்கள் கூறி 2 மாதங்கள் கடந்துவிட்டது. இன்னும் எனக்கு எந்த பதிலும் இல்லை. என்னுடைய சொத்துக்கு ஆசைப்பட்டு என்னுடைய மகனை திருமணம் செய்துவிட்டு 15 நாட்களில் அந்த மணமகள் விட்டு விட்டு சென்றுவிட்டாள்.

என்னுடைய மகளும், ஒரு பேத்தியினையும் வைத்தக் கொண்டு கஷ்டப்படுகிறேன். மீண்டும் 4வது முறையாக உங்களிடம் வந்துள்ளேன். எனக்கு என் வீட்டை மீட்டுத் தருமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

இதில் சரியான தீர்வு வரவில்லை என்றால் நான் என்னுடைய மகள் மற்றும் பேத்தியுடன் தற்கொலை செய்துவிடுவேன் எனக்கு வேறு வழி எதுவும் இல்லை.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b