5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல்
ஹோபர்ட், 3 நவம்பர் (ஹி.ச.) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி  இந்தியா அசத்தல்


ஹோபர்ட், 3 நவம்பர் (ஹி.ச.)

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது நேற்று ஹோபர்ட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி டிம் டேவிட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரின் அதிரடி அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 74 ரன்களும், ஸ்டோய்னிஸ் 64 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா - சுப்மன் கில் களமிறங்கினர். இதில் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாட மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன சுப்மன் கில் (15 ரன்கள்) இந்த ஆட்டத்திலும் ஏமாற்றினார்.

அடுத்து திலக் வர்மா வந்தார். சூர்யகுமார் யாதவ் தனது பங்குக்கு 11 பந்துகளில் 24 ரன்கள் அடித்த நிலையில் கேட்ச் ஆனார். இதனையடுத்து திலக் வர்மா உடன் அக்சர் படேல் ஜோடி சேர்ந்தார்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி இந்திய அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தது. 35 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. அக்சர் படேல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களம் புகுந்த தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினார். சர்வ சாதாரணமாக ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். இதனிடையே திலக் வர்மா 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் ஜிதேஷ் சர்மாவும் அதிரடியாக ஆட இந்திய அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் அடித்து அசத்தல் வெற்றி பெற்றது.

வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளில் 49 ரன்களுடனும் (4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள்), ஜிதேஷ் சர்மா 13 பந்துகளில் 22 ரன்களுடனும் (3 பவுண்டரிகள்) களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM