Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 3 நவம்பர் (ஹி.ச.)
நெல்லை மாநகரப் பகுதி மட்டுமல்லாது மாவட்டத்திலும் கிராமங்கள் வாரியாக காய்ச்சல் பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பிடத்தக்க விஷயமாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் குறைந்தபட்சம் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை உடல் சோர்வு, தலை சுற்றல், வாந்தி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
மேலும் அரசு மருத்துவமனை மட்டுமல்லாது தனியார் ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சல் பாதிப்புக்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சிகிச்சைக்காக காத்துக் கிடப்பதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 3 1/2 வயது மகள் ரூபிகா சமீபத்தில் காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளார். தொடர்ந்து அவரை பெற்றோர்கள் பாளையங்கோட்டை பெருமாள் புரம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு சிறுமி ரூபிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் உடல்நிலை மிகவும் மோசமடைந்து கொண்டே சென்றுள்ளது. இந்நிலையில் கடந்த 31-ந்தேதி ரூபிகாவை அவரது பெற்றோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் வார்டில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் இன்று ரூபிகா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து விட்டாள். நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுமி உயிர் இழந்த சம்பவம் ஒரு வித பீதியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
அவர் நிமோனியா டெங்கு உள்ளிட்ட வைரஸ் வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனினும் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் உடனடியாக சுகாதாரத் துறையினர் சிறப்பு முகாம்களை நடத்தி காய்ச்சல் பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கை வலுத்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN