விடுபட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 - உதயநிதி ஸ்டாலின் உறுதி!
ராணிப்பேட்டை, 3 நவம்பர் (ஹி.ச.) ராணிப்பேட்டையில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழா அரங்கில் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். டிசம்பர் மாதத்திற்குள் விடுபட்டவர்களுக்கு
Udhayanidhi


ராணிப்பேட்டை, 3 நவம்பர் (ஹி.ச.)

ராணிப்பேட்டையில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழா அரங்கில் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

டிசம்பர் மாதத்திற்குள் விடுபட்டவர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

2021ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ என்ற பெயரில் ரேஷன் கார்டு வைத்துள்ள தகுதியான மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்திருந்தது.

அந்தவகையில், கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தகுதியான பெண்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் மாதம்தோறும் ரூ.1000 செலுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 16 லட்சம் பெண்கள் மாதம் ரூ.1000 வாங்கி வருகின்றனர். அதன்படி, கடந்த 26 மாதங்களாக வழங்கப்பட்டு வரும் இத்திட்டத்தால், 30,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம், மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் தங்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, விடுப்பட்டவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு அதில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இதில், புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள், தளர்வுகள் அறிவிக்கப்பட்டவர்கள் என ஏராளமானோர் புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். இதில், இதுவரை சுமார் 28 லட்சம் மகளிர் விண்ணப்பம் அளித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டடது. இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி வருவாய்த்துறை மூலமாக நடந்து வருகிறது. நவ.30ம் தேதிக்குள் அவர்கள் இப்பணிகளை பரிசீலித்து முடிக்க உள்ளனர்.

வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து மற்ற குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என கூறப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களை கூறி அதிகாரிகள் விண்ணப்பங்களை நிராகரிப்பதாக பொது மக்கள் பலர் அமைச்சர்களிடம் முறையிட்டு வந்தனர்.

இந்நிலையில், விடுபட்டவர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அரசு விழா ஒன்றில் பேசிய அவர், தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடியிலும் கூட மகளிர் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மீது முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

விடுபட்டவர்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN