Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 3 நவம்பர் (ஹி.ச)
தெரு நாய்கள் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உத்தரவில், தெரு நாய்களை பிடித்து உரிய தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்த பிறகு அந்த நாய்கள் எங்கு பிடிக்கப்படுகிறதோ அந்த பகுதியிலேயே விட்டுவிட வேண்டும் என்று கூறியிருந்தது.
மேலும், ரேபிஸ் நோய் பரப்பக்கூடியதாக கருதப்படும் நாய்களை பாதுகாப்பான காப்பகங்களில் உரிய முறையில் அடைத்து வைக்க வேண்டும். தெருவோர நாய்களுக்கு உணவளிக்கக் கூடியவர்கள், அதற்கென ஒதுக்கப்பட்ட சில இடங்களில் மட்டுமே உணவுகளை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களும் இந்த வழிமுறைகளை வகுத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதாவது தெருநாய்கள் விவகாரத்தில் மாநிலத்தில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது போன்ற விஷயங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை தவிர தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும் நீதிபதிகள், தாக்கல் செய்யாத மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3ஆம் தேதி நேரில் ஆஜராகி உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில் தெரு நாய்க்கடி பிரச்சனை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழக தலைமை செயலாளர் நா. முருகானந்தம் உரிய ஆவணங்களுடன் இன்று (03.11.2025) நேரில் ஆஜரானார்.
Hindusthan Samachar / vidya.b