Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 3 நவம்பர் (ஹி.ச.)
கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய நபர்களுக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
கோவை விமான நிலையம் அருகே அடையாளம் தெரியாத கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவி - கொடூரச் செயலில் ஈடுபட்ட நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று இரவு தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர், அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும், அவரது ஆண் நண்பர் மீதும் கடுமையாகத் தாக்குதல் நடைபெற்றிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் கோவை சர்வதேச விமான நிலையம் அருகே நடைபெற்றிருக்கும் இச்சம்பவம் அனைத்து தரப்பு பெண்களுக்கும் பெரும் அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகளைக் கடுமையாக்குவதற்கான சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும், இதுபோன்ற கொடூரச் செயல்கள் தொடர்வது, சட்டத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அடியோடு இழக்கச் செய்திருக்கிறது.
எனவே, அடையாளம் தெரியாத கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி மற்றும் அவரது நண்பருக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b