Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 3 நவம்பர் (ஹி.ச.)
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் பவித்ர உற்சவ திருவிழா கடந்த 31-ந்தேதி தொடங்கியது.
3-ம் திருவிழாவான நேற்று (நவ 02) யாகசாலை பூஜையும் அதைத்தொடர்ந்து பவித்ர சமர்ப்பணம் மாலையில் யாகசாலை பூஜையும் நடைபெற்றது.
4-ம் திருவிழாவான இன்று (நவ 03) காலையில் யாகசாலை பூஜையும் 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்னாபன திருமஞ்சனம் சாத்துதலும் அபிஷேகமும் நடைபெற்றது.
இந்த பவித்ர உற்சவ சிறப்பு அபிஷேகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தான ஆகம ஆலோசகர் வரதப்பட்டர் மற்றும் கங்கனப்பட்டர் பாலாஜி ஆகியோர் தலைமையில் 10 அர்ச்சகர்கள் நடத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கண்காணிப்பாளர் சுமதி, கோவில் ஆய்வாளர் லோகேஷ், கண்காணிப்பாளர் லட்சுமிபதி, சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய முன்னாள் துணைத் தலைவர் ஆனந்தகுமார் ரெட்டி, மற்றும் அறங்காவலர்கள் மோகன்ராவ், பாரதிய ஜனதா கட்சியின் தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு மாநில செயலாளர்கள் ஜெயராம், முனிராஜ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
மாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் பவனி வரும் விமான பிரகார உற்சவம் நடைபெறவுள்ளது.
பின்னர் 6.30 மணிக்கு யாகசாலை பூஜையும் இரவு 8.30 மணிக்கு பூர்ணாஹுதி மற்றும் சிறப்பு மணி ஒலியுடன் விசேஷ பூஜையும் நடைபெறவுள்ளது.
இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெறவுள்ளது.
Hindusthan Samachar / vidya.b