Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 நவம்பர் (ஹி.ச.)
நவம்பர் 4ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
டிசம்பர் 4ஆம் தேதி இந்த பணிகள் நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
ஒரே மாதத்தில் இந்த பணிகளை முடிப்பதற்காக, 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 7,234 வாக்குச்சாவடி நிலை அலுவலர் மேற்பார்வையாளர்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த 2,44,685 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. கணக்கீட்டு படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ அல்லது உதவி மையத்திலோ சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை தங்கள் பெயரை இணைத்துக்கொள்ளலாம் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான அட்டவணையை திருத்தி புதிய அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி வரை நடைப்பெறும். அதன் பிறகு டிசம்பர் 12 முதல் 15 ஆம் தேதி வரை அட்டவணை புதுப்பித்தல் மற்றும் வரைவு பட்டியல் தயாரித்தல் பணிகள் நடைப்பெறும்
இதையடுத்து வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்படும். அந்த பட்டியிலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயர்களை சேர்த்துக்கொள்ள டிசம்பர் 16 ஆம் தேதி முதல் ஜனவரி 15 வரை கால அவகாசம் வழங்கப்படும்.
பின்னர் அவை டிசம்பர் 16 முதல் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் சரிபார்க்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
Hindusthan Samachar / ANANDHAN