Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 30 நவம்பர் (ஹி.ச.)
கோவை கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் 13 வீடுகளில் பூட்டை உடைத்து 42 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்,குற்றவாளிகள் மூவரை துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் பிடித்துள்ளனர்.
இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
உத்தரபிரதேசத்தை சேர்ந்த இர்பான், கல்லு, ஆசிப் ஆகிய மூவர் குற்றத்தில் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
இவர்கள் குனியமுத்தூர் பகுதியில் தங்கி இருந்தது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை குளத்துப்பாளையம் அருகே இவர்களை பிடிக்க முயன்றபோது, குற்றவாளிகள் போலீசாரை தாக்க முயன்றதால் தற்காப்பு காரணமாக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக ஆணையர் கூறினார்.
துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வழக்கில் இதுவரை 42 சவரன் தங்க நகைகள்,500 கிராம் வெள்ளி,ரூ.1.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முன்பு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, அலுமினிய பாத்திர வியாபாரம் மற்றும் துணி விற்பனையில் ஈடுபட்டும் வரும் நபர்களுடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இந்த மூன்று பேரும் தங்கியுள்ளனர். பூட்டிய வீட்டுகளில் சுமார் 3 மணி நேரத்திற்குள் கொள்ளை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக 12 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.இது பவாரியா கும்பல் செயல்பாடில் இடம்பெற்றதா என்பது குறித்து தற்போது உறுதி செய்ய முடியாது என்றும், ஒரு ஆட்டோ ஓட்டுநர் இதில் சம்பந்தப்பட்டாரா என்பது விசாரணையில் மட்டுமே தெளிவாகும் என்றும் ஆணையர் கூறினார்.
சூழ்நிலை காரணமாகவே துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும், தற்காப்புக்காக அது அவசியமான நிலை ஏற்பட்டதாகவும் காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் அளித்தார்.
Hindusthan Samachar / V.srini Vasan