Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 30 நவம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தீப விழாவின் சிகர நிழ்ச்சியான பரணி தீபம் வரும் 3ம்தேதி அதிகாலை கோயிலிலும், மகாதீபம் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலையிலும் ஏற்றப்படுகிறது.
தீபத்தை தரிசிக்க கட்டணமில்லாத மற்றும் கட்டண அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி வரும் 3ம்தேதி காலை பரணிதீபம் தரிசிக்க ரூ.500 கட்டணத்தில் 500 நபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
அன்று மாலை மகாதீபம் தரிசிக்க கோயிலுக்குள் செல்ல ரூ.600 கட்டணத்தில் 100 நபர்களுக்கு அனுமதி சீட்டுகளும், ரூ.500 கட்டணத்தில் ஆயிரம் நபர்களுக்கு அனுமதி சீட்டுகளும் வழங்கப்பட உள்ளன.
கட்டண அனுமதி சீட்டுகளை, https://annamalaiyar.hrce.tn.gov.in எனும் கோயில் இணையதளத்தில், ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். நாளை (1ம் தேதி) காலை 10 மணி முதல் அதற்கான இணையதளம் செயல்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கட்டண தரிசன அனுமதி சீட்டு பெற, ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளீடு செய்ய வேண்டும். ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.
கட்டணச்சீட்டு பதிவு செய்ததும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் ஓடிபி எண், பதிவு செய்தவரின் செல்போன் எண்ணுக்கு வரும். கட்டணச் சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் பரணி தீபம் தரிசிக்க வரும் 3ம்தேதி அதிகாலை 1.30 மணி முதல் 3 மணி வரை ராஜகோபுரம் திட்டிவாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.
மகா தீப தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் நுழைவுச் சீட்டு பெற்றவர்கள்க 3ம்தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜகோபுரம் திட்டி வாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.
டிக்கெட் பெற்றவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வர வேண்டும். தாமதமாக வருவோருக்கு அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரணி தீபம் ஏற்றப்பட்டதும் காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையும், மகா தீபம் ஏற்றப்பட்டதும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் ராஜகோபுரம் வழியாக பொது தரிசனத்துக்கு அனுமதிக்கவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b