Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 நவம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் நித்தேஷ் (26). இவர், சென்னை கிண்டி, மடுவன்கரை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் சேர்ந்து தங்கி, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனிங் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 28 ஆம் தேதி அன்று இரவு ராம் நித்தேஷ் வேலைக்கு சென்று விட்டு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அதிகாலை சுமார் 4.30 மணியளவில் அவரின் பக்கத்து அறையில் தங்கியிருந்த அருண் என்பவர் ராம் நித்தேஷை எழுப்பி, ''அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச்சுவர் உள்ளே நிறுத்தி வைத்திருந்த உங்கள் கார் முன்பக்கம் தீ பற்றி எரிந்தது. அதனை தண்ணீர் ஊற்றி நான் அணைத்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ராம் நித்தேஷ் வெளியில் சென்று பார்த்தபோது அவரின் காரின் முன் பக்கம் எரிந்து சேதம் அடைந்து இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ராம் நித்தேஷ் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
போலீசார் நடத்திய ஆய்வில் சிசிடிவி காட்சியில் ஒருவர் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து காரின் மீது வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தியபோது கிண்டி மடுவன்கரை பகுதியைச் சேர்ந்த விஜய பிரபாகரன் (25) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கிண்டி போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விஜய பிரபாகரன் வெல்டிங் வேலை செய்து வருவதும், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அடுக்குமாடி குடியிருப்பில் ராம் நித்தேஷ் உடன் தங்கி இருந்த நபர் அவரை கிண்டல் செய்ததற்காக பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து குடியிருப்பு வளாகத்திற்குள் வீசியபோது அது காரில் பட்டு எரிந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து விஜய பிரபாகரன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னையில் தன்னை கிண்டல் செய்த நபரை பழி வாங்குவதற்கு அவர் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN