Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 30 நவம்பர் (ஹி.ச.)
சிவப்பு நிற ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரமும், மஞ்சள் நிற ரேஷன் கார்டுககு ரூ. 5 ஆயிரமும் மழை நிவாரணமாக வழங்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் டிட்வா புயலின் தாக்கத்தால் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கட்டிட தொழில் புரிவோர், ஆட்டோ ஓட்டுநர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் தொழில்புரிய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் விவசாய விளை நிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 100 நாட்கள் வேலை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஒரு வாரத்துக்கும் மேலாக மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. மீன் விற்பனை செய்யும் மீனவப் பெண்கள் தினசரி வருவாய் இன்றி மிகுந்த சிரமத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் சுமார் 2 லட்சத்து 8 ஆயிரம் சிவப்பு ரேஷன் கார்டும், 1 லட்சத்து 60 ஆயிரம் மஞ்சள் ரேஷன் கார்டும் வைத்துள்ள குடும்பத்தினர் உள்ளனர்.
தற்போது பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பேரிடர் கால புயல் கனமழை நிவாரணம் அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே முதல்வர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத்தினருக்கு ரூ.10 ஆயிரமும், மஞ்சள் நிற கார்டு வைத்துள்ள குடும்பத்தினருக்கு ரூ.5 ஆயிரம் மழைக்கால நிவாரணமாக உடனடியாக வழங்க வேண்டும்.
புதுச்சேரியில் ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவசாயத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 50 சதவீத நிதியை கூட இதுவரை செலவு செய்யப்படாமல் உள்ளனர். பல துறைகளில் செலவு செய்யப்படாமல் தேவையற்ற முறையில் நிதி முடக்கம் செய்துள்ள நிதியில் இருந்து சுமார் ரூ.300 கோடி அளவில் விடுவித்து மக்களுக்கு நிவாரண உதவியை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
இது சம்பந்தமாக முதல்வர் அமைச்சரவை கூட்டத்தை உடனடியாக கூட்டி இது சம்பந்தமான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் மீனவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் ஊட்டசத்து உதவியளித்தல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.4,500 நிதியை, பெய்து வரும் பெருமழையை கருத்தில் கொண்டு மீனவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
கனமழையால் புதுச்சேரி நகர பகுதியில் முழுமையாக சாலைகள் சேதமடைந்து மழை நீர் தேங்கியுள்ளது. நகரப் பகுதியில் புதியதாக செப்பனிடப்பட்ட சாலைகள் தரமற்று இந்த சாதாரண மழைக்கே சேதமடைந்துள்ளது.
பல பகுதிகளில் வடிநீர் வாய்க்கால்கள் இன்னமும் சீரமைக்கப்படாததால், ஆங்காங்கே மின் மோட்டார் முலம் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
சாதாரண மழைக்கே எதிர்கொள்ள முடியாமல் பல குடியிருப்பு பகுதிகள் தேங்கியுள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை நீர் வடிகால் விஷயத்தில் ஆளும் அரசு முழுமையாக தோல்வியடைந்துள்ளது. அரசிடம் இது சம்பந்தமாக தொலைநோக்கு சிந்தனை இல்லாதது தவறான ஒன்றாகும்.
நீர்நிலை, கழிவு நீர் வடிகால் வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அரசு அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN