Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 நவம்பர் (ஹி.ச.)
சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநரின் மாளிகையான ’ராஜ்பவன்', மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலின்படி ‘மக்கள் பவன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் வசித்து வரும் மாளிகைகள் ’ராஜ்பவன்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையும் ராஜ் பவன் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாநில ஆளுநர்கள் மாநாடு, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 'ராஜ் பவன்' (Raj Bhavan) என்று அழைக்கப்படும் ஆளுநர் மாளிகைகளின் பெயரை 'மக்கள் பவன்' என மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் மக்களுக்காக ஆளுநர்கள் சேவையற்றி வருவதால், இது மக்களுக்கான அலுவலகமாக இருக்க வேண்டும் எனவும், அதற்கு மக்கள் பவன் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.
ஆளுநரின் கோரிக்கையை அனைவரும் வரவேற்ற நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுள்ளது. அதன்படி, ராஜ் பவன் என்று அழைக்கப்பட்டு வரும் மாநிலங்களின் ஆளுநர் மாளிகைகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர் மாளிகைகளின் பெயர்களை லோக் பவன் (மக்கள் பவன்) என மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒப்புதல்படி, இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் உள்ள ஆளுநர் மாளிகைகள் அதிகாரபூர்வமாக இனி 'லோக் பவன்' என அழைக்கப்படும். கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையும் இனி 'மக்கள் பவன்' என அழைக்கப்படும்.
முன்னதாக, மேற்கு வங்க மாநில ஆளுநர் மாளிகையின் பெயர் ‘லோக் பவன்’ என்று நேற்று மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது தமிழக ஆளுநர் மாளிகை ‘மக்கள் பவன்’ என மாற்றப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN