கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தேனி, 30 நவம்பர் (ஹி.ச.) வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தாக்கத்தால் மேற்குத்தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளி
Kumbakarai


தேனி, 30 நவம்பர் (ஹி.ச.)

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் தாக்கத்தால் மேற்குத்தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

அதே போல் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலை பகுதி வட்டக்கானல், வெள்ளிகெவி, பாம்பார்புரம் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு, பகல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் அருவிக்கு நீர்வரத்து நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்து கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

டிட்வா புயல் காரணமாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மட்டுமில்லாமல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும், மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் கும்பக்கரை அருவியில் நீராடி கோவிலுக்குச் செல்வது வழக்கம். இந்த தடையால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்கின்ற மழை நீர் சிறு, குறு ஓடைகள் வழியாக கும்பக்கரை ஆற்றை அடைந்து அங்கிருந்து அருவியாக ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் தண்ணீர் மூலிகை குணத்துடன் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருகில் குளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தில் கும்பக்கரை அருவிக்கு வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN