Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 30 நவம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு அரசினால் ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பின்வரும் தகுதிகளின் அடிப்படையில் தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24) பாராட்டு பத்திரமும், ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
2025-26-ம் ஆண்டிற்கான விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கும் பொருட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தை (31 டிசம்பரின் படி) வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டியவை:-
பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான/ தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் வேண்டும்.
விண்ணப்ப விபரங்கள்: குழந்தையின் பெயர், தாய்/தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீர, தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும்.
மேற்சொன்ன விருதினை பெற உரிய ஆவணங்களுடன் முன்மொழிவுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட திட்ட அலுவலகம் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) ஆகிய அலுவலகங்களில் இன்றுக்குள் (30.11.2025) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும் இவ்விருதிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b