பணி அனுபவ சான்றிதழ் கேட்டு பேராசிரியர்கள் போராட்டம்
வேலூர், 30 நவம்பர் (H.S.) தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 2,708 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை போட்டி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, இத
Professors Protest


வேலூர், 30 நவம்பர் (H.S.)

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 2,708 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை போட்டி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, இதற்கான விண்ணப்பங்கள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை www.trb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பெறப்பட்டது. இதற்கான, போட்டித் தேர்வு டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், விண்ணப்பத்தாரர்கள் பணி அனுபவச் சான்றிதழை இணையத்தில் பதிவேற்றம் செய்ய இன்று (நவ.30) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், பணி அனுபவச் சான்றிதழ் பெறுவதற்காக, பேராசிரியர்கள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் (Joint Director of Collegiate Education) அலுவலகத்தில் விண்ணப்பித்தும் இதுவரை சான்றிதழ் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பணி அனுபவச் சான்றிதழ் இணையத்தில் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் நெருங்கியும், சான்றிதழ் வழங்க தாமதப்படுத்திய, கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.

முன்னதாக, கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், கடந்த இரண்டு நாட்களாக காட்பாடியில் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் சான்றிதழ் கேட்டு காத்திருந்தனர்.

ஆனால், அவர்கள் விண்ணப்பித்த அனுபவ சான்றுகள் வழங்கப்படாமல், அலுவலகம் அலட்சியம் காட்டுவதாக பேராசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசியர் ஒருவர் கூறுகையில்,

பணி அனுபவ சான்றிதழ் வழங்காமல் அரசு காலம் தாழ்த்துகிறது.

சான்றிதழை பதிவேற்றம் செய்ய இன்றே கடைசி நாள். சான்றிதழ் வழங்காததற்கான தெளிவான விளக்கத்தையும் அதிகாரிகள் வழங்கவில்லை. அதிகாரப்பூர்வ பதில் எதுவும் கூறவில்லை.

இதுகுறித்து, அலுவலகம் உடனடியாக தீர்வு வழங்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN