Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 4 நவம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று (நவ 04) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தையொட்டி இன்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கஜ பூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து சப்பரத்தில் காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து கொடிப்பட்டம் கோவில் பிரகாரத்தில் எடுத்து வரப்பட்டது.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க அம்பாள் சன்னதி கொடிமரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
அப்போது அங்கிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வருகிற 18-ந்தேதி வரையில் தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் காந்திமதி அம்பாள் வீதி உலாவும் நடைபெறவுள்ளது.
வருகிற 13-ந் தேதி இரவு 1 மணிக்கு காந்திமதி அம்பாள் தங்க முலாம் சப்பரத்தில் கீழ ரதவீதி வழியாக கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைகிறார்.
14-ந் தேதி பகல் 12 மணிக்கு கம்பாநதி அருகே உள்ள காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது.
இதைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.15-ந் தேதி அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் நெல்லையப்பர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இரவு 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பட்டினப்பிரவேச வீதி உலா நடக்கிறது. 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா நடக்கிறது.
18-ந் தேதி சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b