Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூர், 4 நவம்பர் (ஹி.ச.)
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர கிளாட் (Common Law Admission Test-CLAT) எனும் பொது சட்ட நுழைவுத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வினை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு நடத்துகிறது.
பல உயர்கல்வி நிறுவனங்களும் கிளாட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்நிலையில் 2026-27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கிளாட் நுழைவுத் தேர்வு டிசம்பர் 7ம் தேதி மதியம் 2 முதல் 4 மணி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 1ல் தொடங்கி அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் தற்போது வரும் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விருப்பமுள்ள மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க /consortiumofnlus.ac.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.4000ம், எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.3500ம் செலுத்த வேண்டும். மொத்தம் 120 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் தேர்வு நடைபெறும் என தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b