கோவை பெண் பாலியல் குற்ற வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த காவல்துறைக்கு பாராட்டுகள் - ஈ.ஆர்.ஈஸ்வரன்
சென்னை, 4 நவம்பர் (ஹி.ச) கோவையில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டிக்கிறேன். உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்திருக்கின்ற காவல்துறைக்கு பாராட்டுக்கள் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அ
Easwaran


சென்னை, 4 நவம்பர் (ஹி.ச)

கோவையில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டிக்கிறேன்.

உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்திருக்கின்ற காவல்துறைக்கு பாராட்டுக்கள் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

குற்றவாளிகளுக்கு ஒரு பயத்தை உண்டாக்கி இருக்கிறது. பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றம் நடந்தவுடன் வேகமாக செயல்பட்ட காவல்துறை பாராட்டப்பட்டாலும் குற்றத்திற்கான காரணத்தை அரசு அலசி ஆராய வேண்டும். இரவு 11 மணிக்கு விமான நிலையத்தின் பின்புறம் ஒரு ஆணும் பெண்ணும் ஏன் இருந்தார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை. அதன் அடிப்படை காரணம் சமூக சீரழிவு தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சி என்பது தொழில் வளர்ச்சியில் அடங்கியதல்ல. தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும், செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட வளர்ச்சிகள் மட்டுமல்ல. கட்டிடங்களும், சாலைகளும் மட்டுமல்ல.

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்ற திட்டங்கள் மட்டுமல்ல. எவ்வளவு பொருளாதார வளர்ச்சிகள் வந்தாலும் நாட்டு மக்கள் கட்டுப்பாடுகளோடு நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ளாமல் சமூக சீரழிவுக்கு தொடர்ந்து வித்திட்டால் குற்றங்கள் பெருகி நாட்டையே அழிக்கும்.

பள்ளி படிப்பும், கல்லூரி பட்டங்களும் மட்டுமே முதலீடுகள் அல்ல. ஒழுக்கமும், பண்பாடுகளும் நிறைந்த ஒரு தலைமுறையை உருவாக்குவது தான் உண்மையான முதலீடு. தனிமனித உரிமை என்ற பெயரில் சீர்கேடுகளை கட்டவிழ்த்து விட்டதுதான் இது போன்ற குற்றங்களுக்கு அடிப்படை காரணம்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எப்போது என்ன நடக்கும் என்பதையோ, சாதி மதங்களுக்கிடையே எப்போது என்ன நடக்கும் என்பதையோ, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே எப்போது வன்முறை நடக்கும் என்பதையோ, ஒரு திருட்டு எப்போது நடக்கும் என்பதையோ கடவுள் தான் கணிக்க முடியுமே தவிர காவல்துறையோ ஒரு அரசாங்கமோ கணிக்க முடியாது.

தகவல் தொழில்நுட்பங்களும், செயற்கை நுண்ணறிவும் எவ்வளவு வளர்ச்சி பெற்றாலும் சமுதாய பிரச்சனைகளை முன்கூட்டியே அறியக்கூடிய வசதிகள் உலகம் முழுவதும் எங்குமே கிடையாது.

ஒரு குற்றம் நடைபெற்ற பின்னால் அதை கண்டுபிடித்து தண்டனை வழங்க கூடிய அளவிலே தான் காவல்துறையோ மற்ற உளவு அமைப்புகளோ செயல்பட வாய்ப்பிருக்கிறது.

குற்றமே நடக்காமல் தடுக்கப்பட வேண்டுமென்றால் அது குழந்தைகளை வளர்க்கின்ற பெற்றோர்கள் கையில் தான் இருக்கிறது. பாடம் சொல்லிக் கொடுக்கின்ற ஆசிரியர்கள் கையில் தான் இருக்கிறது. பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளுடைய அவசியத்தை எல்லோரும் உணர வேண்டும்.

நம்மை யாரும் கண்காணிக்கவில்லை என்ற எண்ணம் மேலோங்கும் பொழுது தான் தனி மனித குற்றங்கள் நடக்கின்றன. நம்மை மீறிய ஒரு சக்தி எப்போதும் நன்மை கண்காணிக்கிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்தால் குற்றங்கள் குறையும்.

விஞ்ஞான ரீதியாக நமக்கு மீறிய சக்தி இல்லையென்றும் அதுவெல்லாம் மூட பழக்கமென்றும் போதித்தால் குற்றங்கள் செய்ய தயங்க மாட்டார்கள். தவறான தலைமுறையை திட்டமிட்டே உருவாக்கிவிட்டு காவல்துறையையோ, அரசையோ குறை கூறி எந்த பயனும் இல்லை.

காவல்துறையின் அதிவேக செயல்பாடுகளும், பெற்று தருகிற அதிகபட்ச தண்டனைகளும் ஓரளவுக்கு குற்றங்களை குறைக்கும் என்றாலும் தனிமனித ஒழுக்கத்தை வளர்த்துவதன் மூலமாகத்தான் குற்றங்களை தடுக்க முடியும். இல்லையென்றால் தொடர்ந்து குற்றங்கள் நடக்கும் பொழுது நான்கு நாட்கள் காவல்துறையையும், அரசையும் குறை கூறிவிட்டு மறந்து போவதும், குரலை உயர்த்த அடுத்த குற்றம் எப்பொழுது நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருப்பதும் அரசியல் கட்சிகளுடைய, சமூக ஆர்வலர்களுடைய வாடிக்கையாக போகும்.

கட்டுப்பாடு கொண்ட பண்பாட்டோடு வாழுகின்ற ஒழுக்கம் உள்ள அடுத்த தலைமுறையை உருவாக்க தமிழ்நாடு அரசு அதற்கான ஆக்கபூர்வமான பணிகளை துவங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ