Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 4 நவம்பர் (ஹி.ச.)
கோவையிலிருந்து திருச்சி நோக்கி நள்ளிரவு சுமார் 12 மணியளவில் 15 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற ஆம்னி பேருந்து இன்று (நவ 04) அதிகாலை சுமார் 2 மணி அளவில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெருமாளி என்னும் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது ஆம்னி பேருந்தின் முன்பகுதியில் இருந்து லேசாக புகை வருவதை பார்த்த ஓட்டுனர் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கினார். பயணிகளையும் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து இறங்க செய்தார்.
சிறிது நேரத்தில் பேருந்தின் இன்ஜினில் தீப்பற்றியது. தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் பற்றி எரியத் துவங்கியது. பயணிகள் 15 பேரும் பேருந்தில் இருந்து உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்புத் துறை வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயில் பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b