தமிழ் இயக்குனர் தயாள் பத்மநாபனுக்கு கர்நாடக அரசின் திரைப்பட விருது - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வழங்கினார்
மைசூர், 4 நவம்பர் (ஹி.ச.) “கொன்றால் பாவம்” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் தயாள் பத்மநாபன். விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழரான இவர், கன்னடத்தில் 19 படங்களையும், தெலுங்கில் ஒரு படத்தையும், தமிழில் கொன்றால் பாவம்,
விருதுவிருது


மைசூர், 4 நவம்பர் (ஹி.ச.)

“கொன்றால் பாவம்” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் தயாள் பத்மநாபன்.

விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழரான இவர், கன்னடத்தில் 19 படங்களையும், தெலுங்கில் ஒரு படத்தையும், தமிழில் கொன்றால் பாவம், மாருதிநகர் காவல்நிலையம் (ஆஹா ஒரிஜினல்) ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

பழம்பெரும் கன்னட நாடகமொன்றைத் தழுவி, இவர் 2018-ஆம் ஆண்டு தயாரித்து-கதை, திரைக்கதை எழுதி இயக்கிய கன்னட படம் “ஆ கராள ராத்திரி”. பின்னர் இதனை அனகனகா ஒ அதித்தி” என்ற பெயரில் தெலுங்கிலும், “கொன்றால் பாவம்” என்ற பெயரில் தமிழிலும் இயக்கினார்.

2018-ம் ஆண்டுக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதுக்காக, “ஆ கராள ராத்திரி”. சிறந்த படம், சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பரிசீலனைப்பட்டியலில் கே.ஜி.எப்-1 போன்ற படங்களும் இருந்தன.

2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கோவிட் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விருது வழங்கும் விழா, மைசூர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

அந்த விழாவில், சிறந்த இயக்குநருக்கான விருதையும், தயாரிப்பாளர் என்ற முறையில் சிறந்த படத்திற்கான விருதையும் தயாள் பத்மநாபன் பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், கர்நாடக அரசின் திரைப்பட விருது பெறுவது பெருமைக்குரிய செய்தியாகும்.

ஏற்கனவே இவர் 2014-ஆம் ஆண்டு, கர்நாடக அரசின் சிறந்த படம், சிறந்த இயக்குநருக்கான திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.

இவர் தற்போது லட்சுமிகாந்தன் கொலை வழக்கு என்னும் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

தயாள் பத்மநாபன் தன்னுடைய திரை பயணத்தின் அனுபவங்களைப் பற்றி கூறியதாவது :

விழுப்புரம் மாவட்டத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன்.

மத்திய அரசு வேலைக்காக பெங்களூரு சென்றேன். பின்பு சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அங்கேயே உருவானேன். கன்னடம் எழுத படிக்க தெரியாமலேயே 19 படங்களை இயக்கியிருக்கிறேன். கன்னடத்தில் தொழில் முறை வாசகர்களைக் கொண்டு இலக்கியங்களை படித்தேன்.

இதன் மூலம் இரண்டு மாநில விருதுகள் அதிலும், இலக்கியத்திற்காக விருது வாங்கியதில் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

அது மட்டுமில்லாமல், அரசியல் சார்ந்து தான் மாநில அளவில் வேறுபட்டு இருக்கிறோம் கலை என்ற விஷயத்தில் அனைவரும் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்பதற்கு சினிமா ஒரு சிறந்த உதாரணம்.

மேலும், நான் 37 ஆண்டுகளாக கர்நாடகாவில் வசித்து வருகிறேன். இதுவரை கன்னடம் - தமிழ் என்ற வேற்றுமையை நான் எங்கும் பார்த்ததில்லை.

சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்காக மாநில விருது கொடுத்து என்னை கௌரவித்த கர்நாடக முதலமைச்சர் திரு.சித்தராமையா அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

எனது தாய் மொழியான தமிழிலும் பல விருதுகள் வாங்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம் என்றார்.

Hindusthan Samachar / Durai.J