Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 4 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா இன்று (நவ 04) அதிகாலை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 4 மணிக்கு கொடி பட்டம் 4 ரதவீதிகளையும் சுற்றி எடுத்துவரப்பட்டது. 5.30 மணிக்கு மேல் அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றப்பட்டது.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கொடிமரம், நந்தியம்பெருமான், பலிபீடம் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது.
விழாவில், தினமும் பல்வேறு மண்டகப்படிக்காரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் மற்றும் காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள், சப்பரங்களிலும் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து காட்சி தருகிறார். விழாவின் 9-ம் நாளான நவ.12-ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறவுள்ளது. அம்மன் திருத்தேரில் எழுந்தருளி 4 ரத வீதிகளையும் சுற்றி வந்து காட்சி தருகிறார்.
11-ம் நாளான 14-ம் தேதி பகல் 1 மணிக்கு அம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறார். அன்றிரவு 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பூவனநாதராக அம்மனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறவுள்ளது.
12-ம் நாளான 15-ம் தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் (பொறுப்பு) மு.வள்ளிநாயகம் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், மண்டகப்படிக்காரர்கள் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b