Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 4 நவம்பர் (ஹி.ச.)
வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்கள் அனைவரையும் விடுபடாமல் சேர்ப்பது, உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் , சமீபத்தில் பிஹாரில் இப்பணி நடைபெற்றது. விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணி கடந்த 28-ம் தேதி தொடங்கியுள்ளது.
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை வரும் நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிக்கு, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் திருச்சி, ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று
(நவ 04) காலை முதல் தொடங்கியது.
ராமநாதபுரத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக வீடு வீடாக சென்று படிவம் கொடுக்கும் பணி தொடங்கியது. படிவத்தை வாக்காளர்கள் நிரப்ப வேண்டும். நிரப்புவதில் சிரமம் இருந்தால், நிலை அலுவலர்கள் உதவுவார்கள்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் வீட்டுக்கு நேரில் சென்று தேர்தல் அலுவலர்கள் விண்ணப்பம் அளித்தனர்.திருச்சியில் தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று திருத்தப் பணிக்கான விண்ணப்பங்களை அளிக்கின்றனர்.
நிரப்பிய கணக்கெடுப்பு படிவத்தை பெற்றுக்கொண்டு, அதன் ஒரு நகலில் படிவத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை அலுவலர் வழங்குவார். இவ்வாறாக ஒரு வீட்டுக்கு வாக்குச்சாவடிநிலை அலுவலர் 3 முறை செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 4 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று பணி மேற்கொள்வார். எஸ்.ஐ.ஆர். பணி முடிந்த பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள டிச.9 முதல் ஜனவரி 1 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்த பின்னர் பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
Hindusthan Samachar / vidya.b