Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 4 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில், 2025 – 2026 ம் ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தில் காப்பீடு செய்து விவசாயிகள் பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :
தூத்துக்குடி மாவட்டத்தில், ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 2025 – 2026ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் சேமா ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகின்றது.
ரபி பருவத்தில் உளுந்து மற்றும் பாசிப்பயறு காப்பீடு செய்திட காலக்கெடு 15.11.2025, மக்காசோளம் மற்றும் பருத்தி – 30.11.2025, சோளம் மற்றும் நிலக்கடலை 16.12.2025, கம்பு, எள்ளு மற்றும் சூரியகாந்தி – 30.12.2025, நெல் – III (நவரை / கோடை) – 31.01.2026 எனவும் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயிர்காப்பீடு பிரிமீயத் தொகையாக ஒரு ஹெக்டர் உளுந்து ரூ.630, பாசிப்பயறு ரூ.543, மக்காசோளம் ரூ.704, பருத்தி ரூ.1064, சோளம் ரூ.371, நிலக்கடலை ரூ.774, கம்பு ரூ.345, எள்ளு ரூ.304, சூரியகாந்தி ரூ.389, நெல் – III (நவரை / கோடை) ரூ.1334 செலுத்தி உரிய காலக்கெடுவிற்குள் பயிர் காப்பீடு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட பிர்காவில் உள்ள விவசாயிகள், நடப்பில் உள்ள ஆதார் அட்டை நகல், பயிர் சாகுபடி அடங்கல், விண்ணப்ப படிவம் மற்றும் முன்மொழிவுப் படிவம் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமீயத் தொகையினை செலுத்தி பயிர்காப்பீடு செய்து இயற்கை இடர்பாடு ஏற்படும் காலத்தில் உரிய காப்பீட்டுத் தொகை பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b